பிருந்தாவனம்

அழகிய கவிப்பூங்கா...





« Home


>



Friday, February 11, 2011

பனிக்காலம்....

வானம் வாழ்த்தும்
வெள்ளைப் பூக்களால்
வையகம் விதவை.
பனிப்போர்வைக்குள்
பூமிக்கு முதலிரவு.
கள்ளப்பிள்ளை
கோடையில்தான் பிறக்கும்.
விறைத்துப்போன பனித்தேசத்தில்
குறைத்துப் பார்க்கும் பார்வைகளால்
விறைத்துக் கிடக்கும் உணர்வுகள்.
அகத்தி ஆயிரம் பூ பூத்தாலும்
விறத்தி பிறத்தி தானே
பனிப்பஞ்சுடன் பஞ்சாகி
பஞ்சந்தீர்க்கவந்த வெளிநாட்டுக் காகங்கள்
தோட்டி தேடும்.
தோட்டியிலும்
காட்டிக் கொடுக்கும் போட்டிகள்
ஐந்நூறு வருட
காலணித்துவ அடிமைவாழ்வின்
விழித்துக் கொள்ளும் விழுமியங்கள்.
குளிர்நாட்டுக் குருவிகள்
விசாவின்றி எமது தேசங்களில்
உண்டு திண்டு முட்டையிடும்
கண்ட நிண்ட இடங்களில் எச்சமிடும்
வண்ணாத்திகளுக்கு இங்கோ
விசா வேண்டும்.
பனிப்பாலைவனங்களில்
பணத்துக்காய் பறக்கும்
பார்வை இழந்த வண்ணாத்திகள்
வர்ணம் இழந்து போனாலும்
வசந்தம் கொண்டாடும்.
விடியாத தேசங்களில்
விடியுமா வாழ்க்கை?
ஊரில் விதைத்தது கூட
இங்கேயே அறுக்கப்படுகிறது
கல்வியும் களவுமாய்.
தேவடியாள் தேசம் என்றவர்கள்
தேவடியாள் தேசம் தேடி
தேவடியாளருக்கு
தேவை அடியாள் என்று
தேடித் திரிகின்றனர்
தேவர்கள்.
கோவலர்கள் எல்லாம்
மாதவியின் மையலில்...!
இருப்பினும்
தெருவில் விலைப்படும் தேவடியாள் கூட
தேவையில்லை என்கிறாளே
தேவர்கள் தேடிய பணத்தை.
கறுத்துத்தானே கிடக்கிறது
காகங்களின் காசு.
ஊரில் வழுக்கி விழுந்தவளின்
வாழ்க்கை சிதறும்
இங்கே வழுக்கி விழுந்தால் தான்
வாழ்க்கையே வளரும்.
வழுக்கி வழுக்கி விழுந்தே
ஒட்டாது போய்
வழுக்கியது வாழ்க்கை
விறைத்துப்போன
விளைச்சலில்லாத விளை நிலங்களில்
மனித விளைச்சல்களைத் தேடுகிறோம்.
விடியாத தேசங்களில்
விடியுமா வாழ்க்கை?
விடிவைத்தேடி..

                     

No comments:

Post a Comment